Pulampal

Pulampal

Thursday, August 03, 2006

ஆளப்பிறந்த ஆரணங்குகள்

A.J.Gnanenthiran/Swiss
Friday, 21 May 2004

அடுக்களைக்கு உரியவள் பெண் என்ற காலம் மலையேறிப் போய்விட்டது. நான் ஆணுக்கு எந்த விதத்திலும் சளைத்தவள் அல்ல என்று சொல்வதுபோல, இன்றைய பெண் ஆணுக்கு நிகராகப் பலதையும் சாதித்து வருகின்றாள். முன்பு சிறைப் பறவை போல, நாலு சுவர்களுக்குள் முடங்கிக் கிடந்த பெண் குலத்திற்கு, இன்று தாராளமாகவே சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிவதனால், சகல துறைகளிலும் இவளால் பிரகாசிக்க முடிகின்றது. ஆணை முந்துமளவிற்கும் இவள் சாதனைகள், சில சமயங்களில் பல படிகள் மேலே சென்று விடுவதுமுண்டு. பெண் என்றால் பலவீனமானவள் என்ற பதத்திற்கு, என்றோ சாவுமணி அடிக்கப்பட்டு விட்டது என்று சுருங்கச் சொல்லிவிடலாம்.ஒரு நாட்டையே ஆளுமளவிற்கு இன்று பெண் வளர்ந்து உயர்ந்து விட்டதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். ஒருவரல்ல இருவரல்ல, பல பெண்கள், தமது ஆளுமைக்குள், ஒரு நாட்டின் மக்களை வைத்துக் கொண்டு வழிநடத்துவது என்பது மிக எளிதான விடயமல்ல. பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்பதையே இந்த நிகழ்வுகள் நமக்கு நிரூபிக்கின்றன.உலக நாடுகளின் தலைவிகளாக கோலோச்சுபவர்கள் பட்டியலைப் பார்த்தால் தென் கிழக்கு ஆசிய நாடுகளில்தான் ஆளும் பெண்களின் தொகை அதிகரித்து வருவதை நம்மால் காணமுடிகின்றது. அண்மையில் நடந்த இந்திய தேர்தலில் கூட ஒரு பெண்தான் இந்திய உபகண்டத்தை ஆளத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் வேறு யாருமல்ல. ராஜீவ் காந்தியின் மனைவியான சோனியா காந்தி, இந்தத் தடவை அந்தப் பதவியை ஒப்புக் கொள்ளாமல் விலகிக் கொண்டு விட்டார். இந்தியாவில் தமிழ் நாட்டைத் தடம் புரள வைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா இன்னொரு உதாரணம். ஒரு நடிகையாக வெள்ளித் திரையில் பிரகாசித்தவர், தமிழ் நாட்டையே தன் தலைமைக்குள் கொண்டு வந்திருப்பது, ஓர் அசாதாரண சாதனை என்பதில் சந்தேகமே இல்லை.தென் கிழக்கு ஆசிய நாடுகள் பக்கம் திரும்பினால், சிறீலங்காவின் இன்றைய ஜனாதிபதியாக இருப்பவர் ஒரு பெண்தான். கணவன் சுடப்பட்டு கொல்லப்பட்டபோதிலும், அரசியல் கொந்தளிப்பிடையே, ஆட்சிக் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் இவர் இலேசுப்பட்டவர் அல்ல. ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, மகள் என்று மூவருமே ஆட்சிப் பீடத்தில் உட்காருவது என்பது சுலபமான விடயமல்ல. இதை ஒரு உலக சாதனை என்றே கூறவேண்டும். மார்ச் 60ம் ஆண்டு இவரது தாயார் சிறீமாவோ பிரதமராகியபோது, உலகின் முதற் பெண் பிரதமர் என்று இவரது பெயர் சாதனை ஏட்டில் எழுதப்பட்டது. மே 65 வரை ஆட்சியிலிருந்த இவர், பதவியிழந்து, மீண்டும் மே70இல் இவர் ஆட்சிக்கு வந்தார். 77இல் பதவி இழந்து, மூன்றாவது தடவையாக நவம்பர் 94இல் இவர் மீண்டும் பிரதமராகத் தெரிவாகியது என்பது எல்லோருக்கும் முடிந்த காரியமல்ல. 1956இல் இவர் கணவர் பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வந்து, 1959இல் தன் அலுவலகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார். 94ம் ஆண்டில் மகள் சந்திரிகா ஜனாதிபதியாகி, தாயைப் பிரதமராக்கியதும் ஒரு சரித்திரந்தான். 2000மாவது ஆண்டில் சிறீமாவோ இயற்கை மரணம் எய்தினார்.இந்திய உபகண்ட ஆட்சியிலும் குடும்ப ஆட்சி கொடிகட்டிப் பறந்திருக்கின்றது. 1947 இல் தந்தை நேரு ஆட்சிக்கு வந்தார். மகள் இந்திராகாந்தியோ ஜனவரி 66இல் ஆட்சியைப் பிடித்தார். 77இல் ஆட்சி முடிவுக்கு வர, மீண்டும் 1980இல் ஆட்சிக் கட்டிலில் இவர் அமர்;நதார். ஒக்டோபர் 84இல், பொற்கோவிலில், இவரது மெய்க்காப்பாளரால் கொல்லப்படும்வரை ஆட்சி தொடர்ந்திருக்கின்றது. இப்பொழுது 2004ம் ஆண்டு இந்திராகாந்தியின் மருமகளுக்கும் நாட்டை ஆளும் வாய்ப்பு வந்து போயிருக்கின்றது.பெண் ஆளுனர்கள் என்ற பட்டியலில், சிறீமாவோ, இந்திராகாந்தியைத் தொடர்ந்து, Golda Meyer பதவிக்கு வந்தார். இவர் மார்ச் 69ம் ஆண்டு இஸ்ரவேல் நாட்டின் பிரதமராகத் தெரிவாகினார். இவரது ஆட்சி 74ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இவர் 1978ம் ஆண்டு உயிர் நீத்தார். Iron Lady என்று வர்ணிக்கப்பட்ட நெஞ்சுரம் கொண்ட மார்கிரெட் தட்சர் என்பவர்தான் ஐரோப்பாவில் முதற்தடவையாகத் தெரிவாகிய பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெறுகின்றார். இவருடைய ஆட்சி மே 79இல் ஆரமபித்து, நவம்பர் 1990 வரை ஐக்கிய இராஜ்ஜியத்தில் தொடர்ந்தது. இவர் இன்றும் உயிரோடு இருக்கிறார்.பாகிஸ்தானின் ஆட்சியாளராக வந்த பெனாஸீர் பூட்டோவும், பெண் ஆட்சியாளர்கள் மத்தியில் மிகவும் குறிப்பிடத் தக்கவர்.இவருடைய தந்தையார் 1971இல் நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்ப 72ம் ஆண்டு மீண்டும் பிரதமராக இவர் ஆட்சியைப் பிடித்தவர். மகள் பெனாஸீர் 86ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆட்சிக்கு வந்தார். 90ம் ஆண்டு பதவி இழந்து ,மீண்டும் ஒக்டோபர் 93இல் இவரால் ஆட்சிக்கு வர முடிந்திருக்கின்றது. பங்களாதேஷ் நாட்டையும் ஒரு பெண்ணே ஆண்டு வருகின்றார். மார்ச் 91இல் ஆட்சிக்கு வந்தவர் 96இல் தனது நாற்காலியை இழந்தாலும், மீண்டும் 2001வது ஆண்டில் ஒக்டோபர் மாதம் ஆட்சியைப் பிடித்தவர், இன்றுவரையில் ஆட்சியைத் தொடர்ந்தபடி இருக்கி;ன்றார். 96ம் ஆண்டு இவரிடமிருந்து ஆட்சியைப் பறித்ததும் ஒரு பெண்தான். சுதந்திரத்தின் தந்தை என்று வர்ணிக்கப்படும் பங்களாதேஷின் முதற் பிரதமரான முஜிபூர் ரஹ்மானின் மகளான ஹஸீனா வஜீட் என்பவரே இவரின் ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால் இவர் 2001 இன் பிற்பகுதியில் ஆட்சியை கைநழுவ விட்டு விட்டார்.பெண்கள் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கின்றார்கள், எந்த அளவுக்கு மனோதிடம் னொண்டவர்களாக இருக்கின்றார்கள் என்பது இங்கு நன்றாகவே தெரிகின்றது. பிலிப்பைன்ஸ் நாட்டில் Ferdinand Marcos என்பவர் ஆட்சியலிருந்த போது, இவர் மனைவி இமெல்டா, செய்த அட்டகாசங்களை எழுத்தில் வர்ணிக்க முடியாது. 1965 தொடக்கம் 86ம் ஆண்டு வரை, நீண்ட காலம் ஜனாதிபதிபதியாக, மனைவியுடன் இணைந்து கொடுங்கோல் ஆட்சி நடத்தியவர் இவர். அரச கஜானாவைக் கணவனுடன் சேர்ந்து சு10றையாடிய பெருமை இமெல்டாவையே சாரும் . இறுதியில் மக்கள் புரட்சி, இவர்களை நாட்டை விட்டு ஓட வைத்தது. இதே நாட்டில் இவர்கள் ஆட்சி கவிழ, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவர் ஒரு பெண்ணே. Corazon Aquino என்ற பெயர் கொண்ட இவர்தான் ஆசியாவின் முதல் ஜனாதிபதி என்ற பெருமையைப் பெற்றவர். பெண் ஜனாதிபதிகள் வரிசையில் மேலும் நோக்கினால், அயர்லாந்து நாட்டை இன்றும் Mary McAleese என்பவரே ஆண்டு கொண்டிருப்பதைக் காண முடியும். ஆட்சியிலிருந்த இன்னொரு பெண் ஜனாதிபதியின் நாற்காலியில் உட்கார்ந்தவர்தான் இவர். இவருக்கு முன்பு Mary Robinson என்பவர் டிசம்பர் 90ம் ஆண்டிலிருந்து, செப்டெம்பர் 97வரை ஆட்சியில் இருந்தார். ஐ.நா. சபையின் மனித உரிமைப் பிரிவில் உயர் ஸ்தானிகராகவும் இவர் கடமையாற்றினார். ஒரு பெண் ஜனாதிபதியை அடுத்து இன்னொரு பெண் அதே பதவியில் அமர்ந்தது உலக சாதனையாகிற்று.இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பனாமாவை 99ம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டுவரை ஆண்டது ஒரு பெண்தான். இந்த நாட்டின் முதற் பெண் ஜாதிபதியான இவர் பெயர் Moscoso de Arias கனடாவின் கவர்னர் ஜெனரலாக ஒக்டோபர் 99 தொடக்கம் இன்றுவரை பதவி வகித்துக் கொண்டிருப்பது Adrienne Clarkson என்ற துணிச்சலான பெண்மணிதான். கனடா போன்ற ஒரு நாட்டின் மிக முக்கியமான ஒரு பதவிப் பொறுப்பை ஏற்று அதை ஐந்து வருடங்களாகத் தொடர்வது என்பது இலகுவான விடயமல்ல. இன்று நியூசிலாந்து நாட்டைக்கூட எலிஸபெத் கிளார்க் என்ற பெண்தான் ஜனாதிபதியாக ஆண்டு கொண்டிருக்கின்றார். 99ம் ஆண்டு முடிவில் இவர் ஆட்சிக்கு வந்தார். பின்லாந்து நாட்டின் பெண் ஜனாதிபதியாக Kaarina Halonen என்பவர் இப்பொழுது ஆட்சியில் இருக்கின்றார். இவர் ஆட்சியில் அமரும் வரை Jeny Shipley என்ற பெண்தான் இப் பதவியில் இருந்துள்ளார். இது கூட ஒரு சாதனைதான்.ஆபிரிக்க நாடுகளில் கூட பெண்களின் ஆதிக்கம் இருக்கவே செய்கின்றது. மொஸாம்பிக் நாட்டின் பிரதமராக இன்றும் கடமையாற்றும் பெண்தான் Louisa Dias Diogo என்பவர். இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இவர் ஆட்சியில் அமர்ந்தார். மத்திய ஆபிரிக்க குடியரசை, 1975 தொடக்கம் ஒரு ஆண்டு காலம் Elisebeth Domitien என்பவர் பிரதமராக ஆண்டிருக்கின்றார். ருவண்டா நாட்டின் ஆட்சி ஒரு வருட காலம் 93ம் ஆண்டிலிருந்து Agathe Uwlingiyimana என்ற பெண்ணிடம் போயிருக்கின்றது.இத்துடன் பட்டியல் முடிந்து விடவில்லை நோர்வே,இந்தோனேசியா, புருண்டி,பல்கேரியா, துருக்கி, போலந்து, பிரான்ஸ் என்று பரவலாக உலக நாடுகளில் பெண்களின் ஆட்சிக் கொடி பறந்திருக்கின்றது. பணக்கார நாடான அமெரிக்காவைக் கூட மாஜி ஜனாதிபதி கிளின்டனின் மனைவி ஹில்லறி ஒரு காலத்தில் ஆளக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. காலப்போக்கில் இந்தியாவின் பிரதமராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நடிகை ஜெயலலிதா இன்னும் என்ன வித்தைகள் காட்டுவாரோ அதையும் சொல்ல முடியாது. ஜனாதிபதி பதவியைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, தமிழினத்திற்கு ஒரு சாபமாக வந்திருக்கும் சந்திரிகா அம்மையார் இனி என்ன என்ன திருக்கூத்துக்களை நடத்தி முடிப்பாரோ தெரியவில்லை.சுருங்கக் கூறினால் பெண்கள் கை ஓங்குவதும், ஆண்களுக்கு சரிநிகராக இவர்கள் ஜொலிப்பதும் தொடரும் நிலையில், ஆண்களை இவர்கள் முட்டித் தள்ளிவிட்டு முன்னேறும் காலம் ஜனித்து விட்டது என்றே கூற வேண்டும்.

A.J.Gnanenthiran/Swiss

0 Comments:

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.