Pulampal

Pulampal

Thursday, August 03, 2006

உள்வீட்டில் எல்லாமே உள்ளபடி....உள்ளபடி....

- சாந்தி ரமேஷ் வவுனியன் -

நெற்றிப்பொட்டு விட்டெறிந்து
நெடுங்காலம் ஆயிற்று.
கட்டிவந்த கூறைப்பட்டு
கழற்றி வைத்து ண்டாச்சு.
கழுத்திருந்த தாலி கழற்றிக்
கனகாலம் போயிற்று.

கனத்திருந்த அட்டியலும் ,
கைநிறைத்த பொன்வளையல் ,
காதுக்குத் தினமொன்றாய்
கனம் தந்த குண்டலங்கள் ,
எல்லாம் விட்டாச்சு...
கடவுளின் பெயராலே
பெண்கள் கலங்குவது பொறுத்திடாது
கடவுளையும் வணங்குவதை
கடவுளாணை மறந்தாச்சு.

அடிமைகளை எழுப்பி வைக்கப்
புதுமையாய் எழுந்தாச்சு.
எல்லாம்.....எல்லாம்....
எடுத்தெறிந்து பலகாலம்....
எண்ணிக்கை மறந்தாச்சு....
எண்ணமதில் தீமூண்டு
எழுதியவை ஏராளம்.

திண்ணமுடன் தைரியமாய்
சொன்னவைகள் ஏராளம்....
“பாவரசன் பாரதியின்
வரிகளுக்கு உரியவராய்
வலம் வந்த புதுமையின்
பொய்சொன்ன வாய்மொழிகள்
மெய்யென்றுணர்ந்து
மேன்னைமிகு தகுதியெல்லாம்
கொடுத்து வைத்தோம் !

கழுத்தில் கனமான தங்கக்கடை,
கையிலும் வளையலாய்,
மின்னியொழி பாய்சியபடி....
அவிழ்த்து வைத்ததாய்
சத்தியம் செய்த சேலையும்,
மறந்து போன நெற்றிப்பொட்டும்,
கா அதுவும் அழகுதான்.

புதுமைசெய்யப் புறப்பட்ட
புதுமையரின் வாரிசொன்றின்
திருமணத்தில் வேண்டாமென்று
சொன்னவைகள் ,
அடிமையென இருந்தவைகள்....
காணக்கண்கோடி போதுமா ?

தம்பிள்ளை மணவாழ்வில்
இணைந்து விட,
சைவத்தார் முறைப்படி
பொன்னுருக்கி , தாலிசெய்து ,
வேட்டி தலைப்பாகையுடன் கூறைகட்டி ,
மணவறையில் வந்தமர்ந்து
அக்கினி சாட்சி வைத்து
இல்லாத அருந்ததியை
இருந்த இடமிருந்து நோக்கி ,
இருமருங்கும் தாரைவார்த்துத்
தம்பதியர் பெற்றோராய்....
புதுமை செய்யும் பெற்றோராய்....

மற்றோர்க்கு உபதேசம்
பெற்றவர்க்குக் கடைப்பிடிக்க
முடியாத வெளிவேசம்.
திரும்பவும் திரும்பவும்
ஊருக்கு மட்டும் உபதேசம் !
உள்வீட்டில் எல்லாமே
உள்ளபடி....உள்ளபடி....
என்ன செய்ய இந்தச்சாபம்
எங்களுக்குத் தீராதோ ???
சொன்னவரின் வாய்களிதைச்
செவிவைத்துக் கேளாதோ ????

rameshsanthi@hotmail.com
20.03.04

0 Comments:

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.